விபத்தின் பின்னர் டைகர் வூட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றாமல் போகலாம், ஆனால், விபத்துக்காகத் தண்டிக்கப்படமாட்டார்.

கோல்ப் விளையாட்டின் அதிசயப் பிறவி என்று விபரிக்கப்பட்ட டைகர் வூட்ஸ் அவ்விளையாட்டின் அதியுயர் வெற்றிகளைச் சந்தித்தவர். அதன் பின் தளர்வுற்று மீண்டும் திரும்பிவந்து வென்றவர். அதன் பின் உடல்நலக்குறைவால் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருந்தார். மீண்டும் வருவாரா, வெல்வாரா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னர் 23 ம் திகதியன்று வாகன விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

நொருங்கியிருந்த அவரது வாகனத்துக்குள்ளிருந்து அவரைத் தீயணைப்புப் படையினரும், மருத்துவ சேவையாளர்களும் வாகனத்தை வெட்டியே வெளியே எடுக்கவேண்டியிருந்தது. உடனடியாக மருத்துவசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரது கால்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர் நினைவுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.   

டைகர் வூட்ஸ் ஏற்கனவே ஒரு தடவை மது போதையுடனும், போதை மருந்து பாவித்தபடியும் காரோட்டி விபத்துக்குள்ளாகிப் பிடிபட்டவர் என்பதால் இந்த விபத்தைப் பற்றியும் பல கேள்விகள் எழுந்தன. ஆனால், இம்முறை அவரது விபத்து ஒரு தற்செயலானதே என்றும் அவர் குற்றவாளியல்ல என்றும் பொலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply