இரண்டாம் அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் உலகின் பல நாடுகளில் பரவி வருவது போலவே ஜப்பானிலும் நிலைமை கவலைக்குறியதாகவே இருந்தாலும் திட்டமிட்டபடி இவ்வருடத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதியாகச் சொல்கிறது ஜப்பான்.

ஜப்பானின் உறுதி பல முனைகளிலும் சோதிக்கப்படுகிறது. ஜப்பானியர்களிடையே நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி சுமார் 25 விகிதமானவர்களே இப்போது அவ்விளையாட்டுக்களை நடத்துவதில் உற்சாகமாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் போட்டிகளைத் தள்ளிப்போட அல்லது முழுசாக நிறுத்திவிட விரும்புகிறார்கள்.

ஒலிம்பிக்ஸுக்கான செலவுத் திட்டத்திலும் ஜப்பானுக்குக் கடும் சோதனை. சமீப வாரங்களில் மீண்டும் பரிசீலித்ததில் செலவுகள் 2.4 பில்லியன் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத் திட்டத்தை விட ஏற்கனவே செலவுகள் 13 பில்லியன் டொலர்களால் அதிகரித்திருக்கின்றன. அதற்காக இலவச அனுமதிச் சீட்டுக்களைக் கணிசமாகக் குறைத்து ஆரம்ப நாள் கொண்டாட்டச் செலவுகளையும் குறைத்துப் பார்த்தாலும் வெறும் 240 மில்லியன் டொலர்களையே குறைக்க முடிந்தது.

போட்டிகளைத் திட்டமிடும் குழுவினர், கொரோனாத் தொற்றுக்களின் தீவிரம் குறையாவிட்டாலும் விளையாட்டுப் பந்தயங்களை நடத்தியே தீருவது என்பதில் தீர்மானமாக இருக்கிறது. வெளிநாட்டினரை வரவேற்பதற்காகக் கட்டுப்பாடுகளை அவர்கள் தளர்த்த விரும்புகிறார்கள். பார்வையாளர்களை இடைவெளி விட்டு அமரவும், அமைதி பேணவும், முகக்கவசம் அணிந்துகொள்ளவும் கேட்டுக்கொள்கிறார்கள். நுழைவுச்சீட்டுகளை வைத்து ஒவ்வொருவரின் நகர்வுகளைக் கண்காணிக்க விரும்புகிறார்கள், தொற்றுக்களின் வழியை அறிந்துகொள்ள.

விளையாட்டுகளில் பங்குகொள்ள வருபவர்கள் திட்டமிட்ட நாளை விடப் பின்னர் வந்து விரைவிலேயே வெளியேறுவார்கள். அவர்கள் வரும்போதும், நாலைந்து நாட்களுக்கொருமுறையும் அவர்களுக்குத் தொற்று உள்ளதா என்று பரிசீலிக்கப்படும். அவர்கள் ஒருவரொருவருடன் தொடர்புகளைத் தவிர்த்துக்கொண்டு, அமைதியாக முகக்கவசங்களணிந்துகொள்ள வேண்டிக்கொள்ளப்படுவார்கள்.

இவைகளைத் தவிர ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வட கொரியத் தலைவர் கிம் யொங்க் இல்லை வரவேற்கவும் அவருடன் சீனா, தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒழுங்குசெய்யவும் ஜப்பானிய அரசு விரும்புகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply